பள்ளியோடத்து சைக்கிள் 😊

மதிய உணவு இடைவேளை முடிந்து, மீண்டும் வகுப்பு ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடம் இருந்தது.

எங்கள் வகுப்பிற்கு வெளியே நின்று, பக்கத்து வகுப்பு மாணவர்களுடன் பேசிக் கொண்டு இருக்கையில், திடீரென்று ஓடிவந்தான் நண்பன். லேசாக மூச்சு வாங்கி நின்ற பின் தொடர்ந்தான்.

“லே, நம்ம பள்ளிக்கூடத்துக்கு முன்னாடி ரெண்டு பெரிய லாரி வந்து நிக்குது பாத்தியா!” என்றான்.

“லே, நீ இதுக்கு முன்னாடி லாரியைக் கண்டதே இல்லையா? இத சொல்லத்தான் இவ்வளவு தூரம் ஓடி வந்தியா?” என்று சற்று நக்கல் தொனியுடன் கேட்டேன் நான்.

“போல அறிவாளி! உன்னிடம் போய் சொல்ல வந்தேன் ல… என்ன சொல்லன்னும்?” என்று கடிந்துகொண்டவனிடம், “சரி, சொல்லு!” என்றேன் நான்.

“நம்ம பள்ளிக்கூடத்துக்கு சைக்கிள் லோடு வந்திருக்கு! இத சொல்லத்தான் வந்தேன்!” என்றான்.

அவன் சொல்லி முடிப்பதற்குள், நான் ஒரே ஓட்டமாய் பள்ளியின் முன்பாகவே சென்று விட்டேன்.

ஆம்! அவன் சொன்னது உண்மைதான்!
சைக்கிள்தான் வந்திருக்குது — என் மனதுக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.

லாரியில் இருந்து சைக்கிள் உதிரிபாகங்களை ஒவ்வொன்றாக இறக்கி, பள்ளி கலையரங்க முன்னால் வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதனை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கையில் பள்ளி மணி ஒலித்தது.

“லே! பெல் அடிச்சாச்சு! சீக்கிரம் வா போலாம்… மதியத்தில் முதல் பீரியட் மேத்ஸ் வேற! அந்த ஆளு லேட்டா போனா வெளியே அனுப்பிடுவான்!”

போக மனமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தேன். வகுப்பில் அமர்ந்தாலும் மனம் என்னவோ அந்த லாரி மீது தான் இருந்தது.

பக்கத்து ஊர் தோவாளை பள்ளிக்கூடத்துக்கு போன மாசமே சைக்கிள் லோடு வந்தாச்சு. நம்ம ஸ்கூலுக்கு எப்போதுதான் வருமோ என்று அடிக்கடி பேசுவோம். ஒருவழியாக இன்று வந்து சேர்ந்தது!
பள்ளி முடியும் போது, சைக்கிள்களைப் பார்த்து விட்டு தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.

எங்கள் பள்ளியில் ஓர் வழக்கம் உண்டு — மாலை இறுதி வகுப்பு முடிந்ததும் ஒரு மணி ஒலிக்கும்.அந்த மணியை தொடர்ந்து தேசிய கீதம் ஒலிக்கப் படும். தேசிய கீதம் முடிந்த பின் தொடர்ச்சியாக மணி அடித்தால் தான் வெளியே வர வேண்டும்.

ஆனால் முதல் மணி அடித்ததும் என்னை அறியாமல் வகுப்பை விட்டு வேகமாக நடக்கத் தொடங்கினேன். தேசிய கீதம் ஒலித்ததும் சுதாரித்துக்கொண்டு அங்கேயே நின்றேன். நண்பர்கள் சிரித்தனர்.

வெளியே வந்தபோது, சைக்கிள் லோடு முழுமையாக இறக்கப்பட்டு, உதவி தலைமை ஆசிரியர் பார்வை இட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் கூட்டமாக நின்றதை கண்டதும்—

“அங்க கூட்டமா நிற்கக்கூடாது! பெல் அடிச்சதே காதுல விழலையா? எல்லாம் வீட்டுக்கு போங்க டே !” என்று எங்களை விரட்டினார்.

அதன் பின்பு, ஒவ்வொரு நாள் பள்ளிக்கு வரும் பொழுதிலும் எங்கள் பார்வை அந்த கலையரங்கம் முன்பாகவே இருக்கும். இரண்டு நாட்கள் கழித்து சைக்கிள் உதிரி பாகங்களை சேர்த்து சைக்கிள் ஆக உருவாக்க பணியாளர்கள் வந்தார்கள். உணவு இடைவேளை சமயங்களில் அவர்கள் சைக்கிள் அசெம்பிள் செய்யும் பணியை பார்க்க ஓடி வந்து விடுவோம்

“லே மாப்ப்ள! எல்லா சைக்கிள்லயும் முன்னாடி கூடை இருக்குது! இனிமே புக்க்ஸ் எல்லாம் முன்னாடி கூடைல தான்!”

“லே! கூடை வச்ச சைக்கிள் பொம்பள பிள்ளைகளுக்குதான் சரி!” என்றேன் நான்.

“சரி டே … அப்போ உனக்கு தர சைக்கிள்ல கூடையை கழட்டி வச்சிட்டு ஓட்டு!” என்றான்.

நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நா கூடைய களத்தி வச்சுக் கிட்டு தான் ஓட்டுவேன் என்றேன்.

ஏற்கனவே சைக்கிள் வைத்திருக்கும் மாணவர்கள் சிலருக்கு இந்த சைக்கிளில் பெரிய ஆர்வம் இருந்தது இல்லை. மேலும் அவர்கள் இந்த மாடல் சைக்கிள் சரி இல்லை, சும்மா பேருக்கு ஒரு சைக்கிள் இது, என்ன இருந்தாலும் ஹெர்குலஸ் மாடல் சைக்கிள் மாதிரி வராது என்று சொல்வது அவ்வபோது என் காதுகளில் விழும். நான் அப்பொழுதே முடிவு செய்து விட்டேன், சைக்கிள் வாங்கியுடன் அந்த குறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று.

அந்த நாளும் வந்தது, ஆம் பள்ளியில் அனைவருக்கும் சைக்கிள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் தலைமை ஆசிரியர் கையால் சைக்கிள் வழங்கப் பட்டது.

சைக்கிளை வாங்கி மெதுவாக உருட்டிக் கொண்டு பள்ளி வெளியே வந்த போது, கண் காணும் தூரம் வரை எல்லோரும் இந்த புது சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்வதைப் பார்த்தேன். அது ஒரு அருமையான காட்சி.

ஏன் ஒருத்தரும் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போகவில்லை என்று நண்பனிடம் கேட்டேன்.

“லே, சைக்கிள்ல காத்து இல்லை. வீல் வேற கோட்டம் கிடக்கு ! அத சரி பண்ணிக்கிட்டுத்தான் இந்த சைக்கிள ஓட்ட முடியும்! அதனால்தான் எல்லாரும் உருட்டிக்கிட்டே போறாங்க,” என்றான்.

நானும் சைக்கிளை மெதுவாக வீட்டிற்கு உருட்டிக் கொண்டு சென்றேன். செல்லும் வழியிலேயே, சைக்கிளில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று யோசித்துக்கொண்டே நடந்தேன்.

அடுத்த இரண்டு நாட்களில், ஊரில் உள்ள அனைத்து சைக்கிள் கடைகளிலும் கூட்டம். பள்ளியோடத்து சைக்கிள்கள் அனைத்தையும் வரிசையாக நிறுத்தி வைத்து, சரி செய்து கொண்டு இருந்தார்கள்.

தெரிந்த மாமா கடையில் என் சைக்கிளையும் சரி செய்ய எடுத்துச் சென்றேன்.

“வாடே வா! உனக்கும் பள்ளியோடத்துல சைக்கிள் கொடுத்தாச்சா?” என்றார் அவர் சிரித்த முகத்துடன்.

ஆம் என்பது போல் தலை அசைத்தேன்.

“சரி, இப்போ என்ன? காத்து அடைச்சுட்டு போகவந்தியா? பம்பு அங்க இருக்கு… பார்,” என்றார்.

“இல்லை மாமா… எனக்கு சைக்கிளையும் நிறைய மாத்த வேண்டியது இருக்கு. அதான் வந்தேன்,” என்றேன்.

“அப்படி என்னத்த டே மாத்தணும் உனக்கு புது சைக்கிள்லே?” என்று கேட்டார்.

“முன்னாடி கூடைய கழட்டி வைக்கணும்… சீட் கவர் போடணும்… பின்னாடி இருக்கும் கருப்பு கலர் கேரியரை பிடிங்கிட்டு சில்வர் கலர் கேரியர் மாட்டணும்…” என்று அடுக்கிக்கொண்டே போனேன்.

“என்ன டே! லிஸ்ட் எல்லாம் பெருசா இருக்கு. இதெல்லாம் பண்ணனும்னா 150 ரூபாய் மேல செலவு ஆகும். உங்க வீட்ல தருவாங்களா?” என்றார்.

“அதெல்லாம் நான் வாங்கிக்கிட்டு வந்துடுவேன். நீங்க சரி பண்ணிக்கொடுங்க,” என்றேன்.

“இப்போ சைக்கிள் நிறைய இருக்கு டே. நீ ஒரு ரெண்டு–மூணு நாள் கழிச்சிவா. நம்ம பக்காவா ரெடி பண்ணிடுவோம். இப்போதைக்குக் வீல் கோட்டம் மட்டும் எடுத்து தரேன். சனிக்கிழமை வரை இப்பிடியே ஓட்டிக்கோ,” என்றார்.

இல்லை … அப்போ சைக்கிள் இங்கேயே நிக்கட்டும். நான் சனிக்கிழமை எல்லா வேலையும் முடிஞ்சா அப்புறம் எடுத்துக்கிட்டுப் போறேன்,” என்றேன்.

“எல்லா பள்ளியோடத்துச் சைக்கிளும் பாரு… ஒரே மாதிரி தான் இருக்கு. இங்க இருந்தா மாறிப்போயிடும். நீ வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போ… சனிக்கிழமை கொண்டு வா,” என்றார்.

எனக்கும் அது சரி என்று பட்டது.

அடுத்த இரண்டு நாட்கள், பள்ளியின் சைக்கிள் நிறுத்தும் பகுதி முழுவதும் புதிய சைக்கிள்கள் நிரம்பிக் காணப்பட்டன. ஆனால், நான் பள்ளிக்கு எப்போதும்போல் நடந்து சென்றேன்.

“உன் சைக்கிள் என்னாச்சுடே?” என்று கேட்போர் இடமெல்லாம் “நாளைக்கு…” என்று சொல்லிச் சமாளித்து சென்று விடுவேன்.

ஒருவழியாக சனிக்கிழமையும் வந்தது.
சைக்கிள் கடை மாமா என் சைக்கிளை சரி செய்யத் தயாராக இருந்தார்.

என்னை கண்டதும்

“நீ போயிட்டு சாய்ந்திரம் வா. வண்டி ரெடியாக இருக்கும்,” என்றார்.

“சரி,” என்று சொல்லி கிளம்பினேன்.

சரியாக மாலை 4:30 மணிக்கே கடைக்குச் சென்று விட்டேன்.

அவர் என் சைக்கிளை துடைத்துக்கொண்டிருந்தார்.

என்னை கண்டதும்,
“தம்பி! உன் சைக்கிள நல்ல பாருடே!” என்றார்.

வீல் கோட்டம் எடுக்கப்பட்டு இருந்தது. முன் கூடை நீக்கப்பட்டு பம்பர் பொருத்தி இருந்தது. சீட் கவர் மற்றும் ஹேண்டில் பார் கைப்பிடி — பச்சை நிறத்தில் மாற்றப்பட்டிருந்தது. பின் சீட் கேரியரும் மாற்றி இருந்தார்.

அது உண்மையிலே பள்ளிக்கூடத்தில் கொடுத்த சைக்கிள்தானா? என்று
எனக்கே ஆச்சர்யம் அளிக்கும் அளவிற்கு அவருடைய வேலைபாடு இருந்தது.

“ரொம்ப தேங்க்ஸ் மாமா!” என்று சொல்லி அவரிடம் இருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

வீட்டிற்கு செல்வதற்கு முன், சைக்கிளை எடுத்துக்கொண்டு நேராக மரப்பாலம் வரை சென்று ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வந்தேன்.

சைக்கிள் அருமையாக இருந்தது. மனநிறைவுடன் வீட்டிற்கு சென்றேன்.

மறுநாள் திங்கட்கிழமை,
பள்ளிக்கு முதல் முறையாக பள்ளியோடத்துச் சைக்கிளில் சென்றேன்.

சைக்கிளை நிறுத்திக்கொண்டிருந்தபோது, பள்ளியோடத்து பியூன் வந்தார்.

“டே தம்பி! உனக்கு பள்ளியோடத்துல கொடுத்த சைக்கிள் எங்க?” என்று கேட்டார்.

“அது தான் இது…” என்றேன்.

“என்னடே சொல்லுத? பள்ளியோடத்துச் சைக்கிளா இது? நம்பவே முடியல! நல்ல புது சைக்கிள் மாதிரி இருக்கு!” என்று ஆச்சரியப்பட்டார்.

எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.அன்று பள்ளி நண்பர்கள் அனைவரிடமும்இவர் சொன்ன கதையைத் தான் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தேன்.

அதன் பிறகு,
எங்கு எடுத்தாலும் சைக்கிள்…
எதற்கெடுத்தாலும் சைக்கிள்…
என்று ஆகிவிட்டது எங்கள் வாழ்க்கை.

“இந்த பள்ளியோடத்துல சைக்கிள் கொடுத்தாலும் கொடுத்தான்…
இந்த பயலுவ ஒருத்தனையும் கையில பிடிக்க முடியலையே!” என்று
ஏறக்குறைய ஒவ்வொரு வீட்டிலும் இந்த புலம்பல் இருந்துகொண்டிருந்தது.

வெங்கட் ராமன்

ஆரல்வாய்மொழி

venkispeaks@gmail.com


Comments

  1. மகிழ்ச்சி வெங்கட்ராமன்.கதை நன்றாக இருக்கிறது; தொடர்ந்து எழுதுக
    இரா.தெ.முத்து
    சென்னை

    ReplyDelete
  2. நம் அனைவரிடத்திலும் சொல்ல வேண்டிய, சொல்லப்படாத கதைகள் இன்னும் நிறைய உள்ளன. இது என்னை போன்ற பலரின் கதையும் கூட. இதை எழுத்தில் வடித்தமைக்கு நன்றி அண்ணா.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கல்லூரி முதல் திரையரங்கம் வரை

கழுத்தளவு தண்ணீர்