கழுத்தளவு தண்ணீர்
லேய், இன்னைக்கு மத்தியாணம் செம்பிராம்பூர் (செண்பகராமன்புதூர்) ஆத்துக்கு குளிக்க போவோமா? என்று நண்பனிடம் கேட்டேன்.

யாரெல்லாம்? என்று கேட்டான் அவன்.
நீ, நான், வேற நம்ம பயலுவ எவன் லாம் வரேனு சொல்ரானோ அவனுவலயும் கூட்டிட்டு போவோம்.
ஆனா நம்ம ரெண்டு பேருகிட்ட மட்டும் தானே சைக்கிள் இருக்கு?
அதுனால என்ன நம்ம முப்பில்ஸ் போவோம் என்றேன் நான்.
முப்பில்ஸ் ஆ! அவ்ளோ தூரம் மூணு பேர வச்சுட்டு எவன்ல சைக்கிள் சவுட்டுவான்?
லே! உனக்கு தெரியாதா நா நல்ல முப்பில்ஸ் ஓட்டுவன்னு. போன வாரம், நம்ம வடக்கூர் பயலுக கூட சேர்ந்து நான் பொய்கை அணைக் கட்டுக்கே முப்பில்ஸ்ல தான் போயிட்டு வந்தேன்.
லே, இந்த சவுடால லாம் என்கிட்ட உடாத மக்கா.
லே, சத்தியமால. வேணும்னா வடக்கூர் பயலுவ கிட்ட கேட்டு பாரு.
போல! உன்னை பத்தி எனக்கு தெரியாதா நா நம்ப மாட்டேன் என்றான் அவன் ஒரு சிறிய நமட்டு சிரிப்புடன்.
சரி சரி, நீ வீட்ல போய் சோறு தின்னுட்டு, உன் சைக்கிள் எடுத்துகிட்டு டக்கர் ஸ்டான்ட் கிட்ட வந்திரு. பயலுவலயும் அங்கேயே வர சொல்லிடு. நம்ம அங்க இருந்து ஒன்னா சேர்ந்து போவோம்.
செம்பிராம்பூர் ஆத்துல குளிச்சு ரொம்ப நாள் ஆச்சு. எப்படியாவது இன்னைக்கு போய் நல்லா குளிச்சுட்டு வந்திடனும்னு என் மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே வீட்டுக்கு நான் சாப்பிட போனேன்.
பேச்சிப்பாறை அணைல இருந்து பாசனத்துக்காக தோவாளை கால்வாய்ல திறந்து விடுற தண்ணீர் செம்பிராம்பூர் வழியா தான் போகும். தண்ணீர் எதோ பாசனத்துக்காக திறந்து விட்டாலும், நம்ம மக்கள் இத குளிக்கிறது, துணி துவக்கிறதுன்னு எல்லா விதமாகவும் பயன்படுத்திகிடுவாங்க.
ஆராமொழில (ஆரல்வாய்மொழி) இருந்து செம்பிராம்பூர் கிட்ட தட்ட ஒரு 5 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். சைக்கிளில் போக கூடிய தூரம் தான். ஆனா, பொதுவா மக்கள் எல்லாரும் 15A டவுன் பஸ்ல போவாங்க. பஸ் இல்லாத நேரத்துல டக்கர் (ஜீப்) வண்டி ல போவாங்க. பஸ் நேரத்துக்கு மட்டும் தான் உண்டு. ஆனா டக்கர் எப்பொவும் ஸ்டான்ட்ல நிக்கும். வண்டில ஆள் சேர்ந்தா உடனே வண்டிய எடுப்பாங்க, இல்லைனா ஆள் எல்லாம் நிரம்புற வரைக்கும் காத்து கிடக்கணும்.
ஆரமொழில இருந்து மரப்பாலம் போற வர பெருசா ஏத்த இறக்கம் இல்லாத நேர் ரோடு தான். போற வழியில ஒரு பக்கம் பார்த்தா முருகன் கோயில் மலை தெரியும், இன்னொரு பக்கம் பார்த்தா பொய்கை அணை தெரியும். ரெண்டுக்கும் நடுவில இருக்கிற ஆரல்வாய்மொழி - நெடுமங்காடு நெடுஞ்சாலை ல தான் நம்ம போகனும். பெரிய போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை.
அந்த ரோடுல மெதுவா சைக்கில மிடிச்சா கொஞ்ச நேரத்துல மரப்பாலம் வந்திரும்.
மரப்பாலம் தாண்டினா உடனே கொஞ்சம் தூரம் பொறுத்து ஒரு செங்கசுள்ளை வரும், அது கிட்ட ஒரு பெரிய ஏத்தம் வரும். அதுல சைக்கிள் மிதிக்குரத்துக்குள்ள மூச்சு வாங்கிடும். உன்னி உன்னி சைக்கில மிடிச்சா தான் மேல ஏற முடியும்.
அந்த ஏத்தம் ஏறி முடிச்ச உடனே வலது பக்கம் ஒரு பெரிய குளம் இருக்கும். மழைக்காலம் மட்டும் தான் இந்த குளம் பெருகி கிடக்கும். மத்த நேரத்துல இந்த குளம் வத்தி தான் கிடக்கும். ஒரு சில தடவை பயலுவ கூட இங்க குளிச்சு இருக்கேன்.
அந்த குளத்துல இருந்து சைக்கில ஒரு அழுத்து அழுத்தினா நேரா N.S.K பாலிடெக்னிக் காலேஜ் கிட்ட கொண்டு வந்து உட்டுரும். அந்த காலேஜ் வாசல் கிட்ட ஒரு பொட்டி கடை இருக்கும். அங்க ஷாம்பூ, எண்ணெய், சோப்பு எல்லாம் வாங்கிட்டு கிளம்புவோம். அதுக்கு அப்புறம் ரோடு ஒரே இறக்கம் தான். சைக்கிள் அழுத்தாம விட்டாக் கூட அதுவே நேரா கம்பி பாலத்துக்கு கிட்ட கொண்டு போய் விட்ரும்.
கம்பி பாலம் - நீச்சல் தெரியாத சின்ன பிள்ளேல் குளிக்கிற இடம். அது மட்டும் இல்லாம ஊர்ல உள்ள பொம்பள ஆளு எல்லாம் இங்க வந்து தான் துணிய துவச்சி குளிச்சுட்டு இருப்பாங்க. அதுனால பெரும்பாலும் நாங்க அங்க குளிக்க மாட்டோம்.
நாங்க நேர சைக்கிள்ல ஒளவையார் அம்மன் கோயிலுக்கு போயிருவோம். கம்பி பாலத்துல இருந்து அங்க போறதுக்கு கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். ஆனா போற வழில ரெண்டு பக்கமும் பச்சை பசேல்னு அழகான வயல்வெளியா இருக்கும். சைக்கில மிதிச்சுகிட்டு அந்த இயற்கை அழக ரசிச்சுக்கிட்டே போனா கண் இமைக்கும் நேரத்துல ஒளவையார் அம்மன் கோயிலுக்குப் போயிடலாம்.
இந்த ஒளவையார் அம்மன் கோயிலுக்கு ஒரு வரலாறே இருக்கு. கன்னியாகுமரி மாவட்டத்தில ஒளவையார்க்கு இருக்கிற ஒரே ஒரு கோயில் இது தான். ஏன், தமிழ்நாட்டிலேயே இங்க மட்டும் தான் ஒளவையார்க்கு என்று தனி கோயில் இருக்குதுன்னு சொல்லுவாங்க. அது மட்டும் இல்லாம நம்ம தமிழ் கடவுள் முருகன் ஒளவையார் கிட்ட "சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா" என்று கேட்ட உரையாடல் இந்த இடத்தில தான் நிகழ்ந்ததாக நம்பப் படுகின்றது. அதற்கு ஏற்றார் போல கோயிலுக்கு அருகில் இருக்கும் சிறிய குன்றின் மீது ஒரு முருகன் கோயில் கூட இருக்கும். ஆடி மாசம் இந்த கோயில் ல நல்ல விசேஷம் உண்டு. பெண்கள் எல்லாம் கொளுகட்டை வச்சு ஒளவையார் அம்மன வழி படுவாங்க.
அங்க கோயிலுக்கு பின்னால இருக்கிற சானல் கொஞ்சம் குறுகலாக இருக்கும். அதுனால 6-7 அடி ஆழம் இருக்கும். அது மட்டும் இல்லாம சானல சுத்தி பெரிய பெரிய மரம் இருக்குறதால தண்ணி மேல வெயில் படாது. எப்போவும் சில்லுனு இருக்கும் அது மட்டும் இல்லாம 6 அடிக்கு மேல ஆழம் இருக்குரதால சாடி சாடி குளிக்க இந்த இடம் சூப்பரா இருக்கும். இங்க குளிக்கிறதுக்கு பெருசா கூட்டம் இருக்காது. அங்க நீச்சல் தெரியாதவங்க சானல் உள்ள இறங்கி குளிக்க முடியாது. ஆனா, நீச்சல் தெரியாதவங்க படிகட்டுல நின்னு குளிக்கும் வசதி உண்டு.
கோயில்ல எதாவது விசேஷம் இருந்தா இந்த கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த சமயம் நாங்க குளிக்கிறதுக்கு இன்னொரு இடமும் உண்டு. அதுக்கு கம்பி பாலம் பக்கம் போனும்.
கம்பி பாலத்துக்கு கிட்ட வலது புறம் திரும்பினா ஒரு ஒத்தையடி பாதை போகும். அதுல கொஞ்ச தூரம் போன ஒரு சப்பாத்து வரும் அங்க கூட்டம் அவ்வளவா இருக்காது. நாங்க பயலுவ நெறய பேர் போன அங்க தான் போய் குளிப்போம்.
கம்பி பாலத்துல இருந்து இந்த குளிக்கிற இடத்துக்கு வர பாதையே அவ்ளோ அழகாக இருக்கும். நேராக இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை, இடது புறம் இருக்கிற வயக்காடு , வலது புறம் சானல் ல ஓடுற தண்ணி, அதுக்கு அந்த பக்கம் ரெண்டு பன மர உசத்திக்கு இருக்குற காத்தாடின்னு (Windmill) அந்த இடத்தோட அழகை காண கண் கோடி வேணும்.
அது மட்டும் இல்லாம சானல் ல ஒடுற தண்ணிக்கு எதிர் திசைல நம்ம போகனும், அப்போ ஓடுற தண்ணில இருந்து ஒரு குளிர்ந்த காத்து நம்ம மேல அடிக்கும். இந்த இடத்தில இருக்கும் போது சில நேரத்துல "சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா" என்ற இளையராஜா பாட்டிற்கு ஏத்த இடம் இது தானோனு எனக்கு தோணும்.
மத்தியானம் வந்து விட்டது. சொன்ன மாதிரியே சைக்கில எடுத்துகிட்டு அவன் டக்கர் ஸ்டான்ட் கிட்ட வந்துட்டான்.
லே, பயலுவ எவனும் வரல நீயும் நானும் தான் போகணும் போல. பேசாம நம்ம அடுத்த வாரம் போவோமா? என்றான் அவன்.
எனக்கு இன்னைக்கு எப்படியாவது குளிக்க போகனும் ஆசை வந்துடுச்சு. எப்படியாவது இவனை மனசு மாத்தி குளிக்க கூட்டிட்டு போயிரணும்னு எனக்குள்ளேயே சொல்லிகிட்டேன்.
லே, அடுத்த வாரம் ஆத்துல தண்ணி வராதுல, பேச்சிப்பாறை அணைல தண்ணி கொஞ்சம் தான் இருக்காம். அதுனால, இந்த வாரம் தான் கடைசி அதுக்கு அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சு தான் தண்ணி திறந்துவிடுவாங்க என்றேன்.
அப்படியா, அப்போ சரி நம்ம மட்டும் இப்போ போய்ட்டு வருவோம். நல்ல குளிச்சிட்டு வந்து நம்ம பயலுவல வெறுப்பேத்துவோம். அது சரி, இன்னைக்கு ஆத்துல தண்ணி பாயுதானு உனக்கு தெரியுமா?
டக்கர் ஸ்டான்ட்ல ஒரு அண்ணங்கிட்ட காலையிலேயே கேட்டுட்டேன், கம்பி பாலத்துலயே கழுத்து வர தண்ணி போகுதாம்.
கம்பி பாலத்துலயே கழுத்து வர தண்ணி போகுதுன்னா, ஒளவையார் அம்மன் கோயில் கிட்ட நெறய போகும் ல.
ஆமா, ஆமா, வா போவோம் என்றேன் நான்.
ஜாலியா குளிக்க போறோம் என்கிற கனவோட ரெண்டு பேரும் சைக்கில மாங்கு மாங்குனு மிடிச்சுகிட்டு நேரா கம்பி பாலத்துக்கு கிட்டயே போயிட்டோம்.
அங்க போன அப்புறம் தான் எங்களுக்கு அதிர்ச்சி காத்துகிட்டு இருந்தது. ரெண்டு பேரும் மெதுவா ஆத்துல ஓடுற தண்ணிய எட்டி பார்த்தோம். ஆத்துல தண்ணி கால் கரண்டை அளவு தான் ஓடிக்கிட்டு இருந்தது.
அவன் என்னை என்னை முறைத்து பார்த்தான்.
இது தான் உங்க ஊர்ல கழுத்தளவு தண்ணியா? உன்கிட்ட கழுத்தளவு தண்ணி ஒடுதுனு சொன்னவன் எவன் ல? ஊருக்கு போய் அவனுக்கு இருக்கு.
லே, ஒரு வேல அந்த பைத்தியக்கார பய ஆத்துல தலைகீழா நின்னு குளிச்சு இருப்பானோ? என்றேன் நான்.
போல, உன்னை நம்பி இவ்ளோ தூரம் சைக்கில மிடிச்சுகிட்டு வந்தேன்ல நான் தான் பைத்தியக்காரன். என் புத்திய
செருப்பால அடிக்கணும்.
அவன் கோபத்துல சைக்கில திருப்பிக்கிட்டு போனான்.
லேய், இரு நானும் வாரேன் என்று கத்திக்கொண்டே அவனை பின் தொடர்ந்தேன்.
வெங்கட் ராமன்,
venkispeaks@gmail.com,
Aralvaimozhi.
Comments
Post a Comment