கல்லூரி முதல் திரையரங்கம் வரை
லேய், இன்னைக்கு கவிதா மேடம் பீரியட் ல ஏதோ பரீட்சை இருக்குதாம், உனக்கு தெரியுமா? என்று நண்பனிடம் கேட்டேன்.
ஏற்கனவே இன்னைக்கு நம்ம H.O.D பீரியட் வேற இருக்கு. இதுல இந்த பரீட்சை வேறயா, இன்னைக்கு காலேஜ் போன விளங்கிடும் என்றான் அவன்.
என்ன பண்றது என்று இருவரும் யோசித்து முடிப்பதற்குள் கல்லூரி பேருந்து வந்து விட்டது.
இருவரும் சோகமாக பேருந்தில் ஏறினோம்.
நாம பேசாம காவ கிணத்து பஸ் ஸ்டான்ட் ல இறங்கிருவோம ? என்று கேட்டான் நண்பன்.
காவ கிணத்துல இறங்கி என்ன பண்ண? என்றேன் நான்.
நாகர்கோவில் போய் ஏதாவது படம் பாக்க போவோம்.
என்னது நாகர்கோவில் ஆ! பஸ் நம்ம ஊர் வழியாக தான போகும். கண்டிப்பா யாராவது பார்த்துவாங்க. நம்ம மாட்டிக் கிடுவோம்.
நம்ம ஊர் வழியா வேணாம், அஞ்சு கிராமம் வழியா வர பஸ் ல போவோம்.
ஆமா ல, அதுவும் சரி தான். சரி போவோம்.
இப்படி தொடங்கியது தான் எங்கள் திரையரங்க பயண வாழ்க்கை.
நாகர்கோவில் - திரையரங்க விரும்பிகளின் சொர்க்கமா இருந்த கால கட்டம் அது. கன்னியாகுமரி மாவட்டத்தோட மொத்த சனமும் படம் பாக்கணும்னா நாகர்கோவில் தான் வரணும்.
ராஜேஷ், கார்த்திகை, சக்கரவர்த்தி, மினி சக்கரவர்த்தி, தங்கம், நியூ, ராஜாஸ் பிக்சர் பேலஸ் , பயோனிர் முத்து, வசந்தம் பேலஸ், யுவராஜ் என்று திரும்பின பக்கம் எல்லாம் திரையரங்கம் நிறைஞ்சு இருக்கும்.
வடசேரி பஸ் ஸ்டான்ட் ல இறங்கி கொஞ்ச தூரம் நடந்த போதும் ராஜேஷ் தியேட்டர் இருக்கும். அதுல இருந்து ரெண்டு மூணு கடை தள்ளி போன கார்த்திகை தியேட்டர் வந்துரும். மெயின் பஸ் ஸ்டான்ட் பக்கம் இருக்கிறதால இந்த ரெண்டு தியேட்டர்க்கும் வெளியூர் மக்கள் சுலபமா வந்து போவாங்க.
வடசேரி பஸ் ஸ்டான்ட் பின் பக்கம் ஆம்னி பஸ் ஸ்டான்ட் வழியாக போன நியூ தியேட்டர் இருக்கும். மெயின் ரோட்ல இல்லாம ஒரு தெருவுக்குள்ள இருக்கிற மாதிரி தான் இருக்கும். ஆன அந்த தியேட்டர் ல பால்கனி நல்ல இருக்கும்.
வடசேரி சந்தைல இருந்து ரோடு க்ராஸ் பண்ணி போன தங்கம் தியேட்டர் இருக்கும். இங்க சவுண்ட் சிஸ்டம் எல்லாம் நல்லா தான் இருக்கும். ஆனா கூடவே மூட்டை பூச்சி தொல்லை இருக்கும்.
நாகராஜா கோயில் கிட்ட போன யுவராஜ், ராஜாஸ் பிக்சர் பேலஸ் , பயோனிர் முத்து என வரிசையா மூணு தியேட்டர் இருக்கும்.
செட்டிகுளம் பக்கம் போன சக்கரவர்த்தி தியேட்டர்.அங்க DTS சவுண்ட் சும்மா நச்சுன்னு இருக்கும்.
இப்படி நிறைய திரையரங்குகள் இருந்ததால், நாகர்கோவில் போன எப்பிடியும் எதாவது ஒரு படம் பார்த்துடலாம்.
இப்போது போல ஆன்லைன் புக்கிங் எல்லாம் அன்றைய காலங்களில் இல்லை. நேரடியாக சென்று தான் டிக்கெட் வாங்க வேண்டும். அதிலும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என தனித் தனியே டிக்கெட் கவுண்டர்கள் இருக்கும்.
முதல் வகுப்பு 25 ரூபாய், இரண்டாம் வகுப்பு 15 ரூபாய், மூன்றாம் வகுப்பு 5 ரூபாய். இது அப்போதைய அரசு நியமனம் செய்த கட்டணம். ஆனால், முதல் வாரத்தில் இந்த கட்டணம் எல்லாம் செல்லுபடி ஆகாது.
காட்சி நேரத்தில் இருந்து ஒரு கால் மணி நேரம் முன்பாக தான் ஒவ்வொரு டிக்கெட் கவுண்டர் ஆக கதவை திறப்பார்கள்.
முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு முடிந்து மூன்றாம் வகுப்பு கவுண்டர் எல்லாம் இறுதியாக தான் திறக்கப்படும்.
அப்போதெல்லாம் திரையரங்கில் சென்று ஒரு சினிமா பார்க்க வேண்டும் என்றால் இந்த மூன்று சவால்களை கடந்து தான் செல்ல வேண்டும்.
முதல் சவால் என்ன வென்றால் டிக்கெட் கவுண்டர்க்கு வெளியில் வெயிலில் காத்து கிடப்பது.
இரண்டாவது சவால் டிக்கெட் கவுண்டர் கதவை திறந்த உடன் கூட்ட நெரிசலில் முந்தி அடித்து கொண்டு ஆடை கசங்காமல், கூட்டத்தில் செருப்பு மிதிப்பட்டு அறுந்து போகாமல் டிக்கெட் வாங்க வேண்டும்.
இதற்கு பிறகு தான் முக்கியமான மூன்றாவது சவால். என்ன தான் டிக்கெட் வாங்கினாலும் அதில் இருக்கை எண் எல்லாம் கிடையாது. அதனால உடனடியாக ஒரே ஓட்டமாக ஓடி சென்று நல்ல காற்று வருகிற மாதிரியான இருக்கைகளில் போய் இடம் பிடிக்க வேண்டும். குளிர் சாதன வசதி எல்லாம் அப்போது இல்லை. அதனால் மின்விசிறி இருக்கும் இடமாக பார்த்து உட்கார வேண்டும்.இப்படியாக ஒரு மூன்று சவால்களை கடந்து தான் ஒரு சினிமா பார்க்க முடியும்.
நானும் நண்பனும் கல்லூரி காலங்களில் பொதுவாக நாகர்கோவில் சக்கரவர்த்தி தியேட்டர் சென்று தான் பார்ப்போம். அங்கு DTS அருமையாக இருக்கும் என்பதை தாண்டி அது வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து சற்று தூரமாக இருப்பதால் நம் ஊர் கார்கள் கண்ணில் அகப்படும் வாய்ப்பு குறைவு.
அன்றும் அப்படி தான் கல்லூரிக்கு ரகசிய விடுப்பு எடுத்துக் கொண்டு ஒரு திரைப்படத்திற்கு சென்றிருந்தோம்.
ஆனால் அந்த படம் ரொம்ப சுமார் ரகம். பாதியில் வெளியே சென்றால் மாலை வரை என்ன செய்வது என்று வேற வழியில்லாம் முழு படத்தையும் பார்த்து விட்டு வெளியே வந்தோம்.
திரையரங்க வாசலில் வைத்து நண்பன் என்னிடம் "இவ்ளோ கஷ்ட பட்டு ஊரெலாம் சுத்தி இந்த படம் பார்க்க வந்ததுக்கு பேசாம நம்ம H.O.D கிளாஸ் லையே இருந்து இருக்கலாம்ல " என்று கேட்டான்.
ஆமாம் ல என்பது போல நானும் தலை அசைத்தேன்.
வெங்கட் ராமன்,
venkispeaks@gmail.com
ஆரல்வாய்மொழி
Comments
Post a Comment