பள்ளியோடத்து சைக்கிள் 😊
மதிய உணவு இடைவேளை முடிந்து, மீண்டும் வகுப்பு ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடம் இருந்தது. எங்கள் வகுப்பிற்கு வெளியே நின்று, பக்கத்து வகுப்பு மாணவர்களுடன் பேசிக் கொண்டு இருக்கையில், திடீரென்று ஓடிவந்தான் நண்பன். லேசாக மூச்சு வாங்கி நின்ற பின் தொடர்ந்தான். “லே, நம்ம பள்ளிக்கூடத்துக்கு முன்னாடி ரெண்டு பெரிய லாரி வந்து நிக்குது பாத்தியா!” என்றான். “லே, நீ இதுக்கு முன்னாடி லாரியைக் கண்டதே இல்லையா? இத சொல்லத்தான் இவ்வளவு தூரம் ஓடி வந்தியா?” என்று சற்று நக்கல் தொனியுடன் கேட்டேன் நான். “போல அறிவாளி! உன்னிடம் போய் சொல்ல வந்தேன் ல… என்ன சொல்லன்னும்?” என்று கடிந்துகொண்டவனிடம், “சரி, சொல்லு!” என்றேன் நான். “நம்ம பள்ளிக்கூடத்துக்கு சைக்கிள் லோடு வந்திருக்கு! இத சொல்லத்தான் வந்தேன்!” என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள், நான் ஒரே ஓட்டமாய் பள்ளியின் முன்பாகவே சென்று விட்டேன். ஆம்! அவன் சொன்னது உண்மைதான்! சைக்கிள்தான் வந்திருக்குது — என் மனதுக்குள் நானே சொல்லிக்கொண்டேன். லாரியில் இருந்து சைக்கிள் உதிரிபாகங்களை ஒவ்வொன்றாக இறக்கி, பள்ளி கலையரங்க முன்னால் வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். ...