முத்து சலூனில் இருந்து நேரடி ஒளிபரப்பு

21 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்கள் அது. காலையில் பள்ளிக்கூடம், மாலையில் டியூஷன் சென்டர் என ஒரே சுழற்சி முறையில் இயங்கி கொண்டிருந்த காலம்.

இப்போது இருப்பதைப் போன்று ஸ்மார்ட்போன், இன்டர்நெட் எல்லாம் உலகம் முழுவதும் தலைத் தூக்காதொரு  காலம்.

ஏன் தொலைகாட்சி பெட்டி கூட அனைத்து இல்லங்களிலும் சென்றடையாத கால கட்டம் அது. மக்கள் அனைவரும் தொலைக்காட்சி பெட்டியின் முக்கியத்துவத்தை மெல்ல மெல்ல அப்போது தான் உணர தொடங்கினர்.

எனினும், இந்திய துணைக் கண்டத்தின் பட்டித்தொட்டி முழுவதும் கிரிக்கெட் மோகம் பரவிக் கிடந்தது என்றால் அது மிகையாகாது.

செய்தி தாள்களில் கடைசி பக்கத்தில் வரும் விளையாட்டு செய்திகளையும், கிரிக்கெட் போட்டி அட்டவணை களையும் செய்தி தாள்களில் இருந்து கத்தரித்து பள்ளி நோட்டுகளில் ஒட்டி வைத்து போட்டி நாள் வரும் வரை அடிக்கடி அதை பார்ப்பது உண்டு.

எங்கள் வீட்டில் அப்போது தொலைகாட்சி பெட்டி இல்லை. ஆனால் அக்கம் பக்கத்தில் யாரது வீட்டில் வண்ண தொலைகாட்சி பெட்டி உள்ளது, யாரது வீட்டில் கருப்பு வெள்ளை தொலைகாட்சி உள்ளது, யாரது வீட்டில் கிரிக்கெட் ஒளிபரப்பாகும், என அனைத்து விவரமும் எனக்கு தெரியும்.

இப்போது பிரபலமாக இருக்கும் T20 போட்டிகள் அந்த காலகட்டத்தில் கிடையாது. 5 நாட்கள் விளையாடும் டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் முழுவதும் விளையாடும் 50 ஓவர் கொண்ட போட்டிகள் தான் அந்த காலகட்டத்தில் நடப்பவை. அதனால் ஒரு போட்டியை காண வேண்டும் என்றால் ஒரு நாள் முழுவதும் செலவிட வேண்டும்.

என்ன தான் பக்கத்து வீடு, தெரிந்த வீடாக இருந்தாலும் ஒரு நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் அமர்ந்து முழு போட்டியை காண்பது ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும்.

எனவே, முதல் 10 ஓவர் பக்கத்து மாமா வீட்டிலும், மற்றுமொரு 10 ஓவர் ஒரு அண்ணன் வீட்டிலும், கொஞ்ச நேரம் கழித்து பள்ளி நண்பன் வீட்டில் ஒரு 10 ஓவர் என மாறி மாறி பார்ப்பது எனது வழக்கம். போட்டியின் நடுவே அவர்கள் வீட்டில் உணவு அருந்த , டீ காபி குடிக்க நேர்ந்தால் நம்மால் அவர்களுக்கு ஏன் சிரமம் என்று நானே சிறிது நேரம் வெளியே வந்து விடுவேன். சில நேரங்களில் அவர்கள் கேட்டாலும் தவிர்த்து விடுவேன்.

இப்படி எங்கள் தெருவில் உள்ள ஒரு 4 முதல் 5 வீடுகளில் ஒரு நாள் முழுவதும் மாறி மாறி சென்று கிரிக்கெட் பார்ப்பது எனது வழக்கம். 

டெஸ்ட் போட்டி ஒளிபரப்ப படும் நாட்கள் மட்டும் கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஏனென்றால், ஐந்து நாட்கள் தொடர்ந்து ஒரே வீட்டிற்கு சென்று பார்ப்பது சற்று தர்ம சங்கடமாக இருக்கும்.

இந்த சூழ்நிலையில் தான், ஒரு தடவை மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது எதேச்சையாக கிரிக்கெட் மேட்ச் ஒடும் சத்தம் கேட்டு ஸ்கோர் மட்டும் பார்க்க அங்கே சென்ற போது, அங்கே இருந்த கூட்டமும் மக்கள் ஆரவாரமும் என்னை மேலும் சில ஓவர்கள் அப்படியே நின்று பார்க்க சொல்லியது. ஆம், அந்த இடம் தான் முத்து சலூன்.

"ஏன் பா நிக்குற அந்த ஸ்டூல் ல போய் உட்கார்ந்து பாரு" என்று அந்த கடைக்காரர் சொல்லுவார் என்று நான் எதிர் பார்க்கவில்லை. நானும் அந்த ஸ்டூலில் உட்கார்ந்தேன். அப்படி ஆரம்பித்தது முத்து சலூன் கிரிக்கெட் வரலாறு.

டெஸ்ட் மேட்ச் ஆனாலும் சரி ஒருநாள் போட்டி ஆனாலும் சரி, டாஸ் போட்ட நேரத்தில் இருந்து முழுமையாக காண வேண்டும் என்றால் முத்து சலூன் வந்தால் போதும். ஷார்ப் 21 இன்ச் வண்ண தொலைகாட்சி பெட்டியில் நேரடி ஒளிபரப்பை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
அருகில் உள்ள கடைக்காரர்கள் எல்லாம் அங்கே தான் வந்து கிரிக்கெட் பார்ப்பார்கள். 


(படம் : முத்து சலூன்  தற்போதைய  தோற்றம் - அப்போதும் ஏறக்குறைய இதே தோற்றம் தான்)

கிரிக்கெட் மேட்ச் உள்ள நாட்களில்
பள்ளியில் இருந்தாலும் நினைப்பு எல்லாம் கிரிக்கெட் போட்டியின் மீதே இருக்கும்.பள்ளி முடிந்ததும் புத்தக பையோடு வீட்டிற்கு செல்லாமல் முத்து சலூன் சென்று கிரிக்கெட் பார்த்த நாட்கள் ஏராளம். 
அதுவே விடுமுறை தினம் என்றால், நாள் முழுவதும் அந்த மர ஸ்டூலில் தான் எனது இருக்கை. 

ஞாயிற்றுக்கிழமை களில் முடி வெட்ட வந்த கூட்டம் அதிகமாக இருக்கும். அவர் கடையில் ஒரு பெஞ்ச் மற்றும் ஒரு மர ஸ்டூல் மட்டும் தான் உண்டு. முடி வெட்ட வந்தவர்கள் உட்கார இடம் இல்லாமல் போனால், நம்மால் அவருக்கு தொழில் பாதிக்க படக்கூடாது என்று நானே அந்த மர ஸ்டூலில் இருந்து எழுந்து வெளியே சென்று விடுவேன்.

அவர் உடனே தம்பி மேட்ச் இன்னும் முடியலையே, எங்க கிளம்புற என்று உரிமையுடன் கேட்பார்.

இதோ, வீடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன் என்று சொல்லி விட்டு சென்று ஒரு அரை மணி கழித்து மீண்டும் வருவேன்.

தம்பி, நீ போன நேரம் பார்த்து டெண்டுல்கர் அவுட் ஆகிட்டான் பா. அதுக்கு அப்புறம் கங்குலி வந்து ரெண்டு சிக்ஸ் அடிச்சான் இப்போ அவனும் போய்ட்டான் பா என்று நான் இல்லாத நேரத்தில் நடந்த விசயங்களை எனக்கு சொல்லுவார். நானும் அவர் சொல்லிய விவரங்களை கேட்டு தலை அசைத்து கொள்வேன். (ஆனால், நான் இதை எல்லாம் வேறு ஒரு அண்ணன் வீட்டில் பார்த்து கொண்டு தான் இங்கு வந்தேன் என்று அவர் அறிந்து இருக்க வாய்ப்பில்லை)

ஆங்கில வர்ணனைகள் அவருக்கு புரியாது, அவ்வபோது தம்பி அவன் என்ன டே சொல்றான்? என்று கேட்பார்.

நானும் எனக்கு புரிந்ததை அவருக்கு மொழி பெயர்த்து சொல்லுவேன்.

பரவாயில்லையே தம்பி, இங்கிலீஷ் லாம் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கியே என்று பாராட்டுவார்.

கிரிக்கெட் பார்க்கும் போது ஒருவேளை பவர் கட் ஆகி விட்டால் போதும், "பேதில போரவனுக, முக்கியமான நேரத்துல போய் கரெண்ட் ஆப் பண்ணிடானுவலே என்று மின்சார வாரியத்தை திட்டுவார்".

அந்த கால கட்டங்களில், டெண்டுல்கர் அவுட் ஆகி விட்டால் போதும் இந்தியா தோற்று விடும் என்ற மாயை இருந்தது. நிறைய வீடுகளில் டிவி ஐ மாற்றி விடுவார்கள். ஆனால், எத்தனை விக்கெட் போனாலும் இறுதி வரை அவர் சேனலை மாற்றாமல் நம்பிக்கையுடன் என்னுடன் சேர்ந்து பார்ப்பார். ஒரு வேளை தப்பி தவறி இந்தியா வெற்றி பெற்று விட்டால் போதும் "நா அப்போவே சொன்னேன் ல, இந்தியா ஜெய்க்கும்ன்னு யாராவது கேட்டீங்களா டே" என பெருமிதத்துடன் சொல்லுவார்.

பல ஆண்டுகள் அவர் கடையில் நான் கிரிக்கெட் பார்த்து இருக்கிறேன். இருந்தாலும் ஒரு தடவை கூட நான் அவர் கடையில் முடி வெட்டியது இல்லை, அவரும் அதை பற்றி ஒரு தடவை கூட என்னிடம் கேட்டது இல்லை.

இன்று, சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி. இந்தியா மற்றும் நியூ ஜீலாண்ட் அணிகள் பல பரிட்சை செய்கின்றன.
முன்பை போல் இந்த போட்டியை காண பரபரப்பு என்னிடம் இல்லை. எனவே, இன்று இந்த கதையை சொல்ல சரியான நேரம் என்று தோன்றியது.

அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக தற்போது இருந்த இடத்தில் இருந்தே அனைவரும் கைபேசியில் கூட கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பு காணும் வசதி விட்டாலும், ஏனோ அந்த முத்து சலூன்'ல் பார்த்த நேரடி ஒளிபரப்பின் உணர்வுகளில் பாதி தாக்கத்தை கூட இந்த ஸ்மார்ட்போன் உலகம் ஏற்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.

வெங்கட் ராமன். இ,
ஆரல்வாய்மொழி,
venkispeaks@gmail.com

Comments

  1. 90's கிட்ஸ்ன் நேரடி அனுபவம் பதிவு அண்ணா...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கழுத்தளவு தண்ணீர்

கல்லூரி முதல் திரையரங்கம் வரை