நானும் தமிழினியும் ❤️
நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அழகாக மாற நம் குழந்தைகள் அருகில் இருந்தால் போதும்.
இந்த கூற்றை ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நானே ஒத்து கொண்டு இருப்பேனா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் தற்போது முந்தைய கூற்றின் உண்மைத்தன்மையை நான் உணர தொடங்கிவிட்டேன்.
காரணம் தமிழினி❤️
தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக அவளுக்கு தமிழினி என்று பெயர் வைத்தோம். அந்த பெயரை அவளின் மழலை மொழியில் கேட்கும் போது அந்த பெயர் மேலும் இனிமையாகிறது.
"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்"
மழலைச்சொல் கேளா தவர்"
என்ற ஐயன் திருவள்ளுவரின் குறளை பள்ளி காலத்தில் பல முறை படித்து இருந்தாலும் அதன் மகத்துவத்தை இப்போது தான் உணர்கிறேன்.
அலுவகத்தில் இருந்து களைப்புடன் வீடு திரும்பும் போது, வீட்டின் கதவை திறந்தவுடன் அப்பா என்று சிரித்த முகத்துடன் அவள் என்னை நோக்கி ஓடி வருவதை காணும் போது அத்துணை களைப்பும் காற்றில் கரைந்து போகும்.
விடுமுறை நாட்களில் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் பொழுது, என் மேலே ஏறி குதித்து விளையாடி என் தூக்கத்தை கலைத்து விட்டு ஓடி செல்வாள்.
அரை உறக்கத்தில் இருக்கும் என்னை மீண்டும் வந்து எழுப்பி அவளுடன் விளையாட அழைப்பாள். முடியாது என்று வர மறுத்தால் ஒரு செல்ல அழுகையுடன் ஓடி சென்று தன் தாயிடம் முறையிடுவாள்.
சில நாட்களில், அப்பா கதை சொல்லுங்க என்று என் அருகில் வந்து ஆர்வத்துடன் அமர்ந்து கொள்வாள்.
வழக்கம் போல, நாம் சிறு வயதில் கேட்ட ஒரு ஊர்ல என்று ஆரம்பிக்கும் அதே கதையை மீண்டும் மீண்டும் எத்தனை முறை சொன்னாலும் முதல் முறை கேட்பது போலவே சலிக்காமல் கேட்டு தலை அசைக்கும் அவளின் முக பாவனையின் அழகை காண கண் கோடி வேண்டும்.
அனைத்து குழந்தைகள் போலவே அவளுக்கும் கார்ட்டூன் மிகவும் பிடிக்கும். கார்ட்டூன் சேனல் களில் வரும் பாடல் மற்றும் இசைக்கு ஏற்ப நடனமாடுவது அவளுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு. அவள் நடனம் ஆடுவதை அவளுக்கு தெரியாமல் ரசிப்பது என் மனதுக்கு நெருக்கமான ஒரு பொழுது போக்கு.
தப்பி தவறி அவளின் நடனத்தை நாம் ரசிப்பதை அவள் பார்த்து விட்டால் உடனே நடனத்தை நிறுத்தி விட்டு வெட்கத்துடன் முகத்தை மூடி கொண்டு ஓடி விடுவாள்.
இதெல்லாம் அவளுக்கு எப்படி தெரிந்து இருக்கும் என்று நானே பல முறை யோசித்தது உண்டு.
சில நேரங்களில் மிட்டாய் வேணும், ஐஸ் கிரீம் வேணும் என்று அவள் கேட்கும் போது நான் வாங்கி தர மறுத்தால் உடனே அடம் பிடித்து அவள் பொய்யாக அழுவாள். அது பொய்யான அழுகையே என்றாலும் அதனை ஏனோ என்னால் தாங்க முடிவதில்லை.
எவ்வளவு தான் என்னிடம் உறவாடினாலும் அவளுக்கு தன் தாய் மீது தான் அன்பு அதிகம். இருந்தும் உனக்கு அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா என்று கேட்டால் "அப்பா" என்பாள்.
3 வயது மட்டுமே பூர்த்தி அடைந்த என் தமிழினி, வாழ்கையின் பூரணத்தை எனக்கு பல முறை உணர்த்தி இருக்கிறாள்.
நேற்று தான் அவள் பிறந்தது போல் இருந்தது. ஆனால் தற்போது பள்ளி செல்லும் குழந்தையாக வளர்ந்து விட்டாள்.
நாட்கள் தான் எவ்வளவு வேகமாக செல்கின்றன!
"உங்கள் குழந்தைகள் மீது அன்பை செலுத்துங்கள், ஆனால் உங்கள் எண்ணங்களை திணிக்காதீர்கள்."
என்று கலில் கிப்ரான் கூறியது போலவே அன்பை மட்டும் செலுத்தி ஒரு நல்ல தந்தையாக தமிழினியுடன் வாழ முயற்சித்து கொண்டிருக்கிறேன்.
வெங்கட் ராமன் இ
ஆரல்வாய்மொழி
Email : venkispeaks@gmail.com
Comments
Post a Comment