ஜன்னல் ஓரமும், கீழே விழுந்த புத்தகமும்
கடந்த 2014 ஆம் ஆண்டு பணி நிமித்தமாக எனக்கு ஜப்பான் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஜப்பான் செல்கின்றோம் என்பதை விட, முதல் முறையாக விமானத்தில் பறக்க போகிறோம் என்ற உற்சாகமே எனக்குள் மேலோங்கி இருந்தது.
காலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி டெல்லி சென்று அங்கிருந்து இரவு 9.50 மணி விமானத்தில் டோக்கியோ செல்ல வேண்டும். இது தான் பயண விவரம்.
முந்தைய நாள் மாலையில் இருந்தே எனக்குள் ஒரு பரபரப்பு. தேவையான பொருட்கள், துணி மணிகள் என அனைத்தையும் ஒருவழியாக நண்பர்கள் உதவியுடன் தயார் செய்து விட்டேன்.
இது அவசர நிலையில் முடிவு செய்ய பட்ட பயணம் என்பதால் என்னை வழியனுப்ப என் தந்தை சொந்த ஊரில் இருந்து உடனடியாக கிளம்பி சென்னை வரமுடியவில்லை. எனவே என் நண்பர்கள் தான் என்னை வழியனுப்ப வந்தனர்.
கம்பெனியில் இருந்து அதிகாலை 3:00 மணிக்கே வண்டி அனுப்பி விட்டார்கள்.
ஒரு வழியாக விமான நிலையத்தை 3:30 மணிக்கெல்லாம் சென்று அடைந்து விட்டோம். அங்கு ஏற்கனவே என்னுடன் பயணம் செய்யவிருக்கும் அலுவலக நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் வந்திருந்தனர்.
இறுதியாக விமான நிலையத்தின் முன்பாக நின்று நண்பர்கள் உடன் சில புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு ஒரு வழியாக விமான நிலையத்தின் நுழைவு வாயில் தாண்டி உள்ளே செல்லும் போது மணி 4:00 கடந்து விட்டது.
Check In பரிசோதனைக் காக வரிசையில் நின்ற போது, இன்னும் சில நிமிடங்களில் நாம் விமானத்தில் பறக்க போகிறோம் என்ற மனதிற்குள் சொல்லி கொண்டே வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தேன்.
ஒருவழியாக டிக்கெட் பரிசோதனை எல்லாம் முடித்து நாங்கள் செல்லவேண்டிய ஏர் இந்தியா விமானத்தை அடைந்து விட்டோம். விமானத்தின் நுழைவு வாயிலில் கால் வைத்த போது ஒரு புது விதமான சிலிர்ப்பு எனக்குள் உண்டானது.
உள்ளே நுழைந்த உடன், விமான பணிப்பெண் எங்களை வரவேற்று எங்கள் இருக்கைகளை எங்களுக்கு அடையாளம் காண்பித்தார்.
விமானத்தில் எனக்கு கிடைத்தது நடுவில் உள்ள இருக்கை.
முதல் முதலாக விமானத்தில் செல்லும் கனவு நிறைவேறினாலும், ஜன்னல் ஓர இருக்கை கிடைக்கவில்லை என்று சற்று வருத்தமாக தான் இருந்தது.
விமான பணிப்பெண் பாதுகாப்பு விதிமுறைகளை பற்றி அனைவருக்கும் கூறி விட்டு, விமானம் புறப்பட தயாராக உள்ளது என்பதனை தெரிவித்தார். எனக்கோ மனதிற்குள் ஒரு சிறு வருத்தம் ஜன்னல் ஓர இருக்கை கிடைக்கவில்லையே என்று.
எனக்கு அருகில் அந்த ஜன்னல் ஓர இருக்கையில் இருப்பவர் நல்ல கோட் சூட் அணிந்து பார்பதற்கு ஒரு பெரிய நிறுவன அதிகாரி போல் தோற்றமளித்தார். அதனால் அவரிடம் நான் பேச்சு ஏதும் கொடுக்காமல் அமைதியாக என் இருக்கையில் அமர்ந்தேன்.
ஒரு கட்டத்தில் கூச்சத்தை விட்டு விட்டு நானே அவரிடம் நேரடியாக கேட்கலாம் என முடிவு செய்து அவரிடம் பேச்சு கொடுக்க முயற்சி செய்யும் முன்னரே அவர் என் நோக்கத்தை கண்டு கொண்டார்.
"You want Window Seat??" என்று நான் கேட்பதற்கு முன்பே அவர் கேட்டார், நானும் உடனடியாக ஆம் என்பது போல் தலையாட்டினேன்.
உடனே அவர் எழுந்து வந்து எனக்கு ஜன்னல் ஓர இருக்கை அளித்தார். நான் அவருக்கு நன்றி சொல்ல முயற்சித்த போது அவர் அதை கண்டு கொள்ளாமல் என்னை ஏதோ ஏளனமாக பார்ப்பது போல் எனக்கு தோன்றியது.
உடனே எனக்கு வருத்தமாக இருந்தது, குழந்தை தனமாக நடந்து விட்டேனோ அதனால் நம் சுயமரியாதை போய் விட்டதோ என்ற குழப்பங்கள் மனதிற்குள் ஓடின, இருப்பினும் ஜன்னல் வழியாக மேக கூட்டத்தின் இடையே விமானம் செல்லும் அழகை காணும் போது இந்த அவமானம் எல்லாம் மறந்து மெய் சிலிர்க்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
சிறிது நேரம் கழித்து மேல் இருந்த என் பையில் இருந்து "head phone" ஐ எடுக்க முயற்சித்த போது என்னுடைய பையில் இருந்த சில புத்தகங்கள் கீழே விழுந்தன. கீழே விழுந்த அதை எடுக்க முயற்சித்த போது ஒரு கை என்னை நிறுத்தியது.
அது என் அருகில் இருந்த அந்த நபர் தான்.
Do you read Paulo Coelho books? என்று என் கையை பிடித்து அந்த புத்தகத்தை நோக்கி கேட்டார்.
நான் ஆம் என்று சொல்லி அந்த புத்தகத்தை அவரிடம் காண்பித்தேன்.
வேற என்ன புத்தகம் எல்லாம் படிச்சு இருக்கீங்க என்று அவர் ஒரு வித ஆர்வத்துடன் கேட்டார்.
நான் மேலும் என் பையில் இருந்த Paulo Coelho, Leo Tolstoy, Dotsovesky, Joseph Murphy போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை அவரிடம் காண்பித்தேன்.
அவருக்கோ, ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. இப்போது அவர் என்னை பார்க்கும் போது, அவருடைய முந்தைய பார்வைக்கும் இப்போது உள்ள அந்த பார்வைக்கும் உள்ள வித்தியாசம் என்னால் காண முடிந்தது.
அதன் பிறகு அவர் தானும் ஒரு புத்தக பிரியர் என்று என்னிடம் அவரை அறிமுக படுத்தி, தொழில் முறையாக ஜெர்மனி செல்வதாக கூறினார்.
பின்னர், அவருடைய அனுபவம் மற்றும் புத்தக வாசிப்பு குறித்து நீண்ட நேரம் உரையாடினார். இறுதியாக, பயணம் முடிந்து இறங்கும் நேரம் வரும் போது,
Best Wishes for your Journey & Future என்று வாழ்த்தி வழி அனுப்பி சென்றார்.
நானும் அவரிடம் இருந்து விடை பெற்று கொண்டு கிளம்பினேன்.
இந்த நிகழ்வு என் வாழ்க்கை பயணத்தில் ஒரு சிறிய மாற்றத்தை உருவாக்கியது.
உடை, நாகரிகம், செல்வம் இவை எல்லாம் தாண்டி "கற்றோருக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு" என்ற கூற்றை நான் உணர்ந்த தருணம் அது.
இன்றும் என் வாழ்வில் நான் நிறைய புத்தககங்களை படிப்பதற்கு என்னை தூண்டிய ஒரு நிகழ்வு இது என்று சொன்னால் அது மிகையாகாது.
நினைவுகள் தொடரும்.
வெங்கட் ராமன் இ
ஆரல்வாய்மொழி
email : venkispeaks@gmail.com
Comments
Post a Comment