ஒரு ரூபாயும், இரண்டு பை கருவாடும்

நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த காலக்கட்டம் அது.

ஒரு நாள் நாகர்கோவில் செட்டிகுளம் ஜங்ஷனில் இருந்து வடசேரி நோக்கி பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தேன். பேருந்து வேப்பமூடு ஜங்ஷனை கடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்தில் ஒரு சலசலப்பு. 
நடத்துநர் மற்றும் ஒரு பயணி இடையே நடந்த சில்லறை தகராறு அது.

11 ரூபா டிக்கெட்டுக்கு 100 ரூபா கொடுத்தா சில்லரைக்கு நான் எங்கே போவது என நடத்துநர் கேட்க,
சில்லரை இருந்தா நான் கொடுக்க மாட்டேனா என அந்த பயணி பதிலளிக்க, இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியது.

ஒரு கட்டத்தில் நடத்துநர், அந்த பயணியிடம் ஒரு ரூபாய் கொடு மீதி 90 ரூபாய் தருகிறேன் என்று சொல்ல, ஒரு ரூபாய் சில்லறை கூட என்கிட்ட இல்லை என்று அந்த பயணி கூற, சண்டை சூடு பிடித்தது.

உடனே அருகில் இருந்த நான் சண்டையை முடித்து வைக்கும் நோக்கில் என்னிடம் இருந்த ஒரு ரூபாய் எடுத்து அந்த பயணியின் சார்பாக நடத்துநரிடம் கொடுத்தேன். ஒரு வழியாக சண்டை முடிந்தது.

அந்த பயணிக்கு 30 வயது இருக்கும், நல்ல வாட்ட சட்டமாக இருந்தார். மீனவர் போல் தெரிந்தார்.

அந்த பயணி என்னிடம் வந்து குமரிக்கே உரித்தான தொனியில் ரொம்ப தேங்க்ஸ் மக்கா என்றார். நான் இருக்கட்டும் பரவாயில்லை என்றேன்.
அதன் பிறகு மெல்ல என்னிடம் பேச்சு கொடுத்தார். அதில் தான் ஒரு மீனவன் என்றும், கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டம் தான் தன்னுடைய ஊர் என்றும் கூறினார்.
அதன் பிறகு, என்னிடம் நீங்க மீன் சாப்பிடுவீங்களா தம்பி என்று கேட்டார்.
நான் ஆம் என்பது போல் தலையாட்டிய உடனே அவர் முகத்தில் ஒரு புன்னகை ஒளிர் விட்டது.

அப்போ நான் கடலுக்கு போய் திரும்ப வரும் போது ஃபோன் பண்றேன், கண்டிப்பாக நீ எங்க ஊருக்கு வரணும், வந்து அண்ணன் தர மீன் வாங்கிட்டு போகனும் என்றார் நான் சரி என்று தலையாட்டினேன்.(சும்மா ஒரு பேச்சுக்காக சொல்கிறார் என்று அப்போது மனதுக்குள் நினைத்து கொண்டேன்).

வடசேரி பேருந்து நிலையம் வந்தவுடன்
என் ஃபோன் நம்பரை வாங்கிக் கொண்டார். பார்த்து பத்திரமா போ மக்கா என்று புன்னகையுடன் கூறி என்னிடம் இருந்து விடை பெற்று சென்றார்.

இரண்டு வாரங்கள் கழிந்தது.

அவரிடம் இருந்து எனக்கு போனில் அழைப்பு வந்தது.
மக்கா நல்லா இருக்கியா, நேத்து தான் கடல்ல இருந்து வந்தேன், நாளைக்கு மீன் வாங்க வாரியா என்று கேட்டார்.

ரொம்ப நன்றி அண்ணா, ஆன நான் இப்போ வெளிய இருக்கேன் அதனால கண்டிப்பா இன்னொரு நாள் வருகிறேன் என்றேன்.

நீ எப்போ வேணாலும் வா, ஆன வரும் போது ஃபோன் பண்ணிட்டு வா என்றார். நான் சரி என்று சொல்லி இணைப்பை துண்டித்தேன்.

பின்னொரு நாளில், என் அத்தை வீட்டில் மருத்துவ தேவைக்காக கருவாடு தேவைப்பட்டது. 
உடனே அந்த அண்ணன் என் நினைவுக்கு வந்தார். அவரை தொடர்பு கொண்டு கொஞ்சம் கருவாடு கிடைக்குமா என்று கேட்டேன், நாளைக்கே வா தருகிறேன் என்று கூறினார். நானும் சரி நாளை வருகிறேன் என்றேன்.

அடுத்த நாள், நானும் என் அத்தை மகனும் மோட்டார் சைக்கிளில் அவரை காண சென்றோம். கன்னியாகுமரி அருகில் சென்ற உடன் அவரை தொடர்பு கொண்டு வழி கேட்டு ஒரு வழியாக அவரது மீனவ கிராமத்துக்கு சென்று விட்டோம். 

மணி காலை ஒரு பதினொன்று இருக்கும். எங்களை கண்ட உடன் வரவேற்று ஒரு குளிர்பான கடைக்கு அழைத்து சென்றார். குமரி ஸ்பெஷல் ஆன முட்டை பப்ஸ் மற்றும் ரஸ்னா வாங்கிக் கொடுத்தார். மீண்டும் ஒரு பப்ஸ், பால் பன் வாங்கிக் கொடுத்தார். போதும் போதும் என்றாலும் விடவில்லை. 
"நல்லா சாப்பிடு மக்கா எங்க ஊருக்கு வந்திருக்க இது கூட சாப்பிடாம போன எப்படி என்று அன்பாக கடிந்து கொண்டார்."

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்த உடன் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
முதல் முறையாக மீனவ கிராமத்திற்கு செல்லும் எனக்கு அங்கு எல்லாமே வித்தியாசமாக இருந்தது.
வீட்டிற்கு சென்ற உடனே அவரது வீட்டில் உள்ள அனைவரும் என்னை பற்றி விசாரிக்க எனக்கோ ஒரே ஆச்சர்யம். (அதன் பிறகு தான் தெரிந்தது அன்று பேருந்தில் நடந்ததை தன் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லியிருக்கிறார் என்று.)
உள்ளே சென்ற அந்த அண்ணன், இரண்டு மூங்கில் பை நிறைய கருவாடு எடுத்து கொண்டு வெளியே வந்தார். (எதோ வெளியே வியாபாரத்திற்கு எடுத்து செல்கிறார் என்று நினைத்தேன்)

வெளியே வந்ததும், யாருக்கோ ஃபோன் செய்தார். சிறிது நேரத்தில் அவர் ஒரு பெரிய மீனை தோளில் தூக்கி கொண்டு வந்தார். அது நாள் வரை அவ்வளவு பெரிய மீனை நான் கண்டதில்லை.

சரி மக்கா இந்த மீன முன்னாடி வச்சுக்க, கருவாடு பைய வண்டிக்கு பின்னாடி தொங்க விட்டுக்கோ என்று சொல்லி அந்த இரண்டு கருவாடு பையயும், பெரிய மீனையும் என்னிடம் கொடுத்தார். எனக்கு தூக்கி வாரி போட்டது. நாங்கள் வந்தது ஒரு நூறு ரூபாய்க்கு கருவாடு வாங்க, எனவே நான் மெல்ல தயங்கிய படியே அவரிடம் சென்று, அண்ணா என்கிட்ட பணம் கொஞ்சம் குறைவா தான் இருக்கு அதனால எனக்கு நிறைய வேண்டாம் கொஞ்சம் கருவாடு மட்டும் போதும் என்றேன்.

நான் சொன்னது தான் தாமதம், பளார் என்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. 
நான் என்ன மீன் வியாபாரத்திற்காக வா உன்னை வர சொன்னேன், நா உன்கிட்ட எப்போ ல பைசா கேட்டேன். எல்லா மீனையும் வீட்டுக்கு கொண்டு போய் ஒன்னு விடாம சாப்பிட்டு எனக்கு ஃபோன் பண்ணி சொல்லு, அடுத்த முறை இன்னும் நிறைய மீன் தரேன் என்று உரிமையாக கடிந்து கொண்டார்.

எனக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. அவரது கரடு முரடான அன்பைக் கண்டு மெய் சிலிர்த்தது போனேன்.

நன்றி மட்டும் கூறி கொண்டு சரி அண்ணன் அப்போ நான் கிளம்புறேன் என்றேன்.

மறக்காம வீடு போய் சேர்ந்த உடன் ஃபோன் பண்ணி சொல்லு டே என்றார்.
சரி என்று சொல்லி விட்டு நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கிளம்பினோம்.

மீனவ மக்கள் என்றாலே கரடு முரடானவர்கள் என்று பொதுவான கருத்து சாமானிய மக்களிடையே இருந்தாலும் எனக்கோ அவர்களை விட அன்பானவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை என்று அப்போது தோன்றியது.

அதற்கு பின்னர் அவ்வபோது பேசிக்கொள்வோம். பின்னாளில் நான் கல்லூரி முடித்து சென்னை கிளம்பும் போது இறுதியாக அவரிடம் பேசினேன்.
அதன் பிறகு கால போக்கில் மெல்ல மெல்ல தொடர்பு குறைந்தது. இப்போது முற்றிலும் இல்லை. அவரது தொலைபேசி எண் தற்போது உபயோகத்தில் இல்லை. காலங்கள் பல கடந்தாலும் அந்த நினைவுகள் இன்றும் அப்படியே இருக்கிறது என்றாவது மீண்டும் சந்திப்போம் என்று.

நினைவுகள் தொடரும்.

வெங்கட் ராமன்,
ஆரல்வாய்மொழி.
venkispeaks@gmail.com

Comments

Post a Comment

Popular posts from this blog

கழுத்தளவு தண்ணீர்

முத்து சலூனில் இருந்து நேரடி ஒளிபரப்பு

கல்லூரி முதல் திரையரங்கம் வரை