மரக்குரங்கு
90 களின் இறுதியில் எங்கள் ஊரில் மிக பிரபலமாக இருந்த விளையாட்டு.
சொல்லப்போனால் இயற்கையோடு இணைந்த விளையாட்டு அது. இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு இப்படி ஒரு விளையாட்டு இருந்தது என்று தெரிந்து இருக்க கூட வாய்ப்பில்லை.
இவ்வளவு ஏன், நாங்கள் விளையாடிய அந்த நாட்களில் கூட எங்கள் ஊரை தவிர வேறு எங்கும் இந்த விளையாட்டை நான் கண்டதில்லை.
எனவே இந்த விளையாட்டை பற்றி ஒரு சிறு குறிப்பாவது எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா.
அப்படி என்ன விளையாட்டு என்று தானே கேட்கிறீர்கள், சொல்கிறேன் அந்த விளையாட்டின் பெயர் தான் மரக்குரங்கு.
இந்த விளையாட்டிற்கு குறைந்தது 5 நபராவது வேண்டும்.
மேலும் மிக முக்கியமாக விளையாடும் இடத்தில் ஒரு 4 அல்லது 5 மரங்களாவது இருக்க வேண்டும் அப்போது தான் இந்த விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்கும்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக கலந்து கொண்ட நபர்களில் யார் முதலில் தொட்டு வருகிறார் என்பதனை முடிவு செய்ய வேண்டும். பெரும்பாலும் இதனை இவ்வாறு தான் முடிவு செய்வோம். அதாவது, அனைவரும் வட்டமாக நின்று கொண்டு 1,2,3 இல் இருந்து 10 வரை எண்ணி அதில் யார் இறுதியாக வருகிறார்களோ அவர் தான் தொட்டு வர வேண்டும்.
மைதானத்தின் நடுவில் ஒரு வட்டம் வரைந்து, தொட்டு வருபவர் தவிர அனைவரும் அந்த வட்டத்திற்கு அருகே நிற்க வேண்டும், யாரேனும் ஒருவர் வந்து ஒரு மரக்குச்சியை கையில் எடுத்து தூரமாக வீச வேண்டும். தொட்டு வருகின்ற நபர் அந்த குச்சியை ஓடி போய் எடுத்து வந்து இந்த வட்டத்தில் வைக்க வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் மற்ற அனைவரும் அருகில் உள்ள மரங்களில் ஏறி கொள்ள வேண்டும்.
போட்டி விதிமுறை என்ன வென்றால் தொட்டு வருகின்ற நபர் அந்த குச்சியை வட்டத்தில் போட்டு விட்டு, மரத்தில் இருக்கும் யாராவது ஒரு நபரை மரத்தில் ஏறி தொட்டு விட்டு மீண்டும் கீழே இறங்கி வந்து வட்டத்திலுள்ள அந்த குச்சியை கையில் எடுத்து வாயால் கடித்து அவுட் என்று கூறினால் போதும். ஆனால் இவர் மரத்தில் ஏறி தொடுவதற்கு முன்பாக வேறு யாராவது வந்து அந்த குச்சியை எடுத்து கடித்தால் தொட்டு வரும் நபர் ஆட்டம் இழப்பார்.
மறுபடியும் ஆட்டம் முதலில் இருந்து தொடங்கும்.
தொட்டு வரும் நபர் குச்சியை வட்டத்தில் வைத்து விட்டு மரத்தில் ஏறுவது தான் தாமதம், அதற்குள் மற்ற அனைவரும் ஆள் ஆளுக்கு ஒரு மரத்தில் ஏறி கொண்டு மரத்திற்கு மரம் குரங்கு மாதிரி தாவுவார்கள்.
அதனாலேயே இந்த விளையாட்டிற்கு மரக்குரங்கு என்று பெயர் வந்தது.
அப்போதைய கால கட்டங்களில் கிரிக்கெட் விளையாட்டு மிக பிரபலமாக இருந்த போதிலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் இந்த மரக்குரங்கு விளையாட்டை விளையாட தவறியதில்லை.
சிறு வயதில் அந்த மரத்திற்கு மரம் தாவியதை இன்று நினைத்து பார்த்தாலும் மெய் சிலிர்க்கிறது.
நாங்கள் விளையாடிய காலங்களில் எங்கள் மைதானத்தில் இருந்த மரங்களில் முக்கியமாக குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் கண்டிப்பாக வாராட்சி மரம், பூவரச மரம், புளிய மரம், உட (சீம கருவேல) மரங்களை சொல்லியே ஆக வேண்டும்.
ஆனால் இன்று அந்த மரங்களை எல்லாம் அந்த மைதானத்தில் கான முடிவதில்லை. வடிவேலு பாணியில் சொல்லவேண்டும் என்றால் இன்றைய தேதியில் அந்த மைதானத்தையே காணவில்லை.
காலத்தின் கட்டாயமாக நகரங்களை நோக்கி நம் வாழ்வு நகர்ந்து விட்டாலும், இன்றும் சொந்த ஊருக்கு செல்லும் பொழுது இந்த இனிமையான நினைவுகள் மீண்டும் மனதில் அசைப்போடத்தான் செய்கின்றன.
நினைவுகள் தொடரும்.
Venkat Raman,
venkispeaks@gmail.com.
ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டம்.
Super Bro👌👌👌
ReplyDelete