நானும் தமிழினியும் ❤️
நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அழகாக மாற நம் குழந்தைகள் அருகில் இருந்தால் போதும். இந்த கூற்றை ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நானே ஒத்து கொண்டு இருப்பேனா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தற்போது முந்தைய கூற்றின் உண்மைத்தன்மையை நான் உணர தொடங்கிவிட்டேன். காரணம் தமிழினி❤️ தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக அவளுக்கு தமிழினி என்று பெயர் வைத்தோம். அந்த பெயரை அவளின் மழலை மொழியில் கேட்கும் போது அந்த பெயர் மேலும் இனிமையாகிறது. "குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்" என்ற ஐயன் திருவள்ளுவரின் குறளை பள்ளி காலத்தில் பல முறை படித்து இருந்தாலும் அதன் மகத்துவத்தை இப்போது தான் உணர்கிறேன். அலுவகத்தில் இருந்து களைப்புடன் வீடு திரும்பும் போது, வீட்டின் கதவை திறந்தவுடன் அப்பா என்று சிரித்த முகத்துடன் அவள் என்னை நோக்கி ஓடி வருவதை காணும் போது அத்துணை களைப்பும் காற்றில் கரைந்து போகும். விடுமுறை நாட்களில் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் பொழுது, என் மேலே ஏறி குதித்து விளையாடி என் தூக்கத்தை கலைத்து விட்டு ஓடி செல்வாள். அரை உறக்கத்தில் இருக்கும் என்னை மீண்ட...